

புதுடெல்லி:
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றது. மார்ச் 5-ம் தேதி தொடங்கிய இந்த தேர்வின் வணிகவியல் பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில் அப்பாடத்தின் வினாத்தாள் வாட்ஸ்-ஆப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை டெல்லி கல்வித்துறை மந்திரி மணிஷ் சிசோடியா, 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுக்கான, கணக்குப்பதிவியல் வினாத்தாள் வெளியானதாக தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து விசாரணை செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், வினாத்தாள் வெளியானதாக பரவிய தகவலுக்கு சிபிஎஸ்இ மறுப்பு தெரிவித்துள்ளது. 'வினாத்தாள்கள் அடங்கிய பார்சல் சீல் வைக்கப்பட்டு தேர்வு முகாம்களில் பத்திரமாக உள்ளன. தேர்வு நடக்கும் போது இதுபோன்ற பொய்யான தகவல்களை சிலர் சமூக ஊடகங்கள் மூலம் பரப்புகின்றனர். இது தேர்வினை சீர்குலைப்பதற்காக செய்யப்படும் வேலையாகும். இது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ச்சியாக இது போன்ற பிரச்சனை நடைபெற்று வருகிறது. இதற்கு முன் வேதியியல், இயற்பியல் மற்றும் வணிக அறிவியல் தேர்வு வினாத்தாள்கள் வெளியானதாக புகார் எழுந்தது. இதையடுத்து கணக்குபதிவியல் வினாத்தாள் வெளியானதாக சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #CBSE #QuestionPaperLeak #Accountancy