

கர்நாடகத்தில், குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்த பிறகு, பா.ஜனதா ஆட்சி அமைந்தது. எடியூரப்பா, முதல்மந்திரியாக பதவி ஏற்றார்.
இந்த நிலையில் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட பாஸ்கர்ராவ், கமிஷனர் பதவிக்காக ஒரு கட்சியின் பிரமுகருடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பான ஆடியோ உரையாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குமாரசாமி ஆட்சியில் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக பா.ஜனதா புகார் கூறியது.
பா.ஜனதா, கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளராக இருந்த சித்தராமையா, அவருடைய உதவியாளர்கள் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சில தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் என மொத்தம் 300 பேரின் தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டதாக பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா, முன்னாள் போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் உள்ளிட்ட பலர் இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளித்த குமாரசாமி, யாருடைய தொலைபேசியையும் ஒட்டு கேட்கவில்லை என்றும், அதுதொடர்பான புகார் உண்மைக்கு புறம்பானது என்றும், எத்தகைய விசாரணைக்கும் தயார் என்றும் கூறினார்.
கர்நாடக அரசியலில் இந்த தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. இந்த நிலையில் இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த முதல்-மந்திரி எடியூரப்பா பரிந்துரை செய்தார்.
சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று பெங்களூருவில் உள்ள முன்னாள் போலீஸ் கமிஷனர் அலேக்குமார் வீட்டில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.