டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் - சி.பி.ஐ.க்கு கோவை கோர்ட்டு உத்தரவு

போலீஸ் துணை சூப்பிரண்டு விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோவை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. #DSPVishnupriya #CBI #Investigation
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் - சி.பி.ஐ.க்கு கோவை கோர்ட்டு உத்தரவு
Published on

கோவை:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டாக (டி.எஸ்.பி.) இருந்தவர் விஷ்ணுபிரியா. இவர் 2015-ம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக விஷ்ணுபிரியா இருந்தார். உயர் அதிகாரிகள் அவருக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக தான் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லை என்றும், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அதை விசாரித்த ஐகோர்ட்டு, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து, கோவை தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட்டும் ஐகோர்ட்டு அளித்த உத்தரவை உறுதி செய்தது.

இதையடுத்து விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி ஏப்ரல் மாதம் கோவை தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

அதில், விஷ்ணுபிரியா, உயர் அதிகாரிகள் அழுத்தம் காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. எனவே இந்த வழக்கை கைவிடுவதாக கூறப்பட்டு இருந்தது. சி.பி.ஐ. அளித்த அறிக்கைக்கு எதிராக விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையை தள்ளுபடி செய்ததுடன், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் சி.பி.ஐ. விசாரித்து 6 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், உயர் அதிகாரிகள் உள்பட 7 பேரிடமும் விசாரணை நடத்த விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியின் வக்கீலுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டார். #DSPVishnupriya #CBI #Investigation 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com