பணியில் உள்ள நீதிபதி வீட்டில் சோதனையிட முயற்சிப்பதா? சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

நீதிபதிகள் பெயரில் லஞ்சம் விவகாரத்தில் பணியில் உள்ள நீதிபதியை நடத்திய விதம் சரியல்ல. இத்தகைய தவறுகளை சி.பி.ஐ.யிடம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
பணியில் உள்ள நீதிபதி வீட்டில் சோதனையிட முயற்சிப்பதா? சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
Published on

புதுடெல்லி:

வழக்குகளில் சாதகமான தீர்ப்பு அளிப்பதற்காக, நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த புகாரில், ஒடிசா ஐகோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி வீட்டில் சோதனையிடுவதற்காக, கடந்த செப்டம்பர் 19-ந் தேதி இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் குழு சென்றது. ஆனால் அந்த வீட்டில், பணியில் உள்ள ஒரு நீதிபதி குடியேறியது தெரியாமல், அந்த வீட்டுக்குள் நுழைய முயன்றனர். இதுதொடர்பாக, நீதிபதி வீட்டு காவலாளி அளித்த புகாரின்பேரில், சி.பி.ஐ. மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

மேலும், ஒடிசா பார் அசோசியேசன் சார்பில் நீதி விசாரணை கோரி ஒடிசா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்தது.

அம்மனு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ. சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சம்பந்தப்பட்ட நீதிபதியிடமும், ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடமும் சி.பி.ஐ. சூப்பிரண்டு நேரில் மன்னிப்பு கேட்டதாகவும், அதை இருவரும் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், ‘உங்கள் மன்னிப்பை அவர்கள் ஏற்றதற்கு என்ன ஆதாரம்?’ என்று கேள்வி எழுப்பினர். மேலும், ‘பணியில் உள்ள நீதிபதியை நடத்திய விதம் சரியல்ல. இத்தகைய தவறுகளை சி.பி.ஐ.யிடம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. வீட்டு பெயர் பலகையை பார்த்திருக்க வேண்டாமா?’ என்று கேட்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com