கர்நாடக எல்லையில் பதட்டம் தணிந்தது - லாரி, வாகனங்கள் இயங்க தொடங்கின

கர்நாடக மாநிலத்திலும், தமிழக - கர்நாடக எல்லையான ஓசூர் மற்றும் அத்திப்பள்ளியிலும் பதட்டம் தணிந்து உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு வாகன போக்குவரத்து தொடங்கியது.
கர்நாடக எல்லையில் பதட்டம் தணிந்தது - லாரி, வாகனங்கள் இயங்க தொடங்கின
Published on

காவிரி நதி நீர் பிரச்சினையில் இன்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக சில அம்சங்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடக மாநில பாசனத்துக்கு கூடுதல் நீர் திறக்கவும், பெங்களூரூ குடிநீர் திட்டத்துக்கு காவிரி ஆற்று தண்ணீரை பயன்படுத்திக்கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. தமிழ் நாட்டுக்கு தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பை கர்நாடகமும், கன்னட அமைப்புகளும் வரவேற்று உள்ளன.

இதனால் கர்நாடக மாநிலத்திலும், தமிழக - கர்நாடக எல்லையான ஓசூர் மற்றும் அத்திப்பள்ளியிலும் பதட்டம் தணிந்து உள்ளது. இதனால் இன்று காலை 11 மணிக்குப்பிறகு தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு வாகன போக்குவரத்து தொடங்கியது. ஓசூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கர்நாடக பதிவெண் கொண்ட லாரிகள், ஆம்னி பஸ்கள், சரக்கு வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் கர்நாடக மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.

இதேபோல அத்திப்பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அனைத்தும் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டன. தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசு பஸ்கள் மட்டும் இன்னும் ஓசூர்- பெங்களூரூ இடையே ஓடவில்லை. பஸ் போக்குவரத்தும் இன்று மாலை முதல் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று இரவு 11 மணி முதல் பஸ்கள் ஓசூர்-பெங்களூரூ இடையே ஓடாமல் ஓசூரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com