தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் படுத்து தூங்கும் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தஞ்சை கலெக்டர்அலுவலகத்தில் விவசாயிகள் படுத்து தூங்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் முன்பு விவசாயிகள் படுத்து தூங்கும் போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.
தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் முன்பு விவசாயிகள் படுத்து தூங்கும் போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் விவசாய சங்க கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை.சுகுமாறன், விவசாய சங்க துணை அமைப்பாளர் கோவிந்தராஜ், நசுரினி ஆற்று படுகை தலைவர் வீரசேரன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜெயபால் உள்பட 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

கூட்டம் நடக்கும் கூட்டரங்கிற்கு சென்ற விவசாய சங்கத்தினர் திடீரென மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் முன்பு கீழே படுத்து தூங்கும் போராட்டத்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியத்துக்கு மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்காததை கண்டித்தும் அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

உடனே அதிகாரிகள் மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள் பேச்சு வார்த்தைக்கு உடன் படவில்லை.

இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற வல்லம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் விவசாயிகளை வலுக்கட்டாயமாக அங்கிருந்து தூக்கி சென்று வெளியே விட்டனர்.

பின்னர் கூட்டம் நடக்கும் கூட்டரங்கில் இருந்து வெளியேற்றப்பட்ட விவசாயிகள் வெளியே வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த கக்கரை சுகுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது.

மாநில அரசு உடனே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதில் தீவிரமாக களம் இறங்கி தமிழக அரசு காவிரி நீரை பெற்று தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் விவசாய சங்க துணை அமைப்பாளர் கோவிந்தராஜ் கூறும் போது, ‘‘உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதற்கு தமிழக அரசு உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

வருகிற 30-ந்தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் ஏற்கனவே பாலைவனமாக உள்ள டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலை செய்ய கூட தயங்கமாட்டார்கள்’’ என்றார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com