தஞ்சை அருகே 3 ரெயில்களை மறித்து விவசாயிகள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் நிலையில் தஞ்சையில் 3 ரெயில்களை மறித்து விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.
தஞ்சையை அடுத்த விண்ணனூர் பட்டியில் விவசாயிகள் ரெயிலை மறித்து போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.
தஞ்சையை அடுத்த விண்ணனூர் பட்டியில் விவசாயிகள் ரெயிலை மறித்து போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.
Published on

பூதலூர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலும் விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் அய்யனாபுரம் முருகேசன் தலைமையில் தஞ்சை அடுத்த பூதலூர் அருகே உள்ள விண்ணனூர் பட்டியில் திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த பாசஞ்சர் ரெயிலை இன்று காலை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மறித்து போராட்டம் நடத்தினர். தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் ரெயில் நிறுத்தப்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திருவையாறு டி.எஸ்.பி. அன்பழகன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரெயில் அங்கிருந்த செல்ல வைத்தார். அதன் பின்னரும் விவசாயிகள் அங்கிருந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் சமவெளி விவசாயி சங்க தலைவர் பழனி ராஜன், விடுதலை தமிழ் புலிகள் மாநில துணை செயலாளர் அருண் மாசிலாமணி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் முத்துச்சாமி, தெட்சணாமூர்த்தி, நாராயணசாமி, உதயக்குமார், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அதே வழியாக வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலையும், காரைக்கால் ரெயிலையும் போராட்டக்காரர்கள் மறித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த போராட்டம் காரணமாக ரெயில் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com