காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தலைமை தபால் நிலையத்திற்கு பூட்டு - 200 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தலைமை தபால் நிலையத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்திய ஜான்பாண்டியன் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தலைமை தபால் நிலையத்திற்கு பூட்டு - 200 பேர் கைது
Published on

நெல்லை:

சுப்ரிம் கோர்ட் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரியும் மத்திய அரசை கண்டித்தும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஸ்ரீபுரத்தில் உள்ள நெல்லை தலைமை தபால் நிலையத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது.

நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் நெல்லையப்பன், கண்மணி மாவீரன், சண்முக சுதாகர், அழகர்சாமி, ரவி தேவேந்திரன் உள்ளிட்டவர்கள் தபால் நிலைய அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியவாறு பூட்டு போடுவதற்காக உள்ளே சென்றனர். ஆனால் போலீசார் இவர்களை உள்ளே செல்லாதவாறு தடுத்து நுழைவுவாயிலை இழுத்துமூடினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நுழைவு வாயில் கேட்டிற்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஜான் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி பிரச்சினை தமிழக விவசாயிகளுக்கு வாழ்வாதார பிரச்சனை. எனவே உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். சுப்ரிம் கோர்ட் உத்திரவிட்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துகிறோம். உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜான் பாண்டியன் உள்ளிட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com