

மாட்ரிட்:
ஸ்பெயினில் கேட்டலோனியா மாகாணம் தன்னாட்சி உரிமை பெற்றது. அதற்கு சுதந்திரம் வழங்கும்படி கோரிக்கை எழுந்தது. கடந்த அக்டோபர் 1-ந்தேதி பொது வாக்கெடுப்பு நடந்தது.
அதில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கேட்டலோனியா சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதை ஸ்பெயின் அரசு நிராகரித்தது.
மேலும் கேட்டலோனியா பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அது ஸ்பெயினின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் கேட்டலோனியா பிரிவினைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அதன் தலைவர் சார்லஸ் புக்டிமான்ட் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் கோர்ட்டில் நடைபெறும் விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே கேட்டலோனியா தலைவர் கார்லஸ் புக்டிமான்ட் மற்றும் 4 முன்னாள் அமைச்சர்கள் பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகருக்கு தப்பி சென்று விட்டனர்.
மற்ற 8 முன்னாள் மந்திரிகள் கோர்ட்டில் ஆஜராகினர். அவர்களை ஜெயிலில் அடைக்கவும் ஜாமீனில் வர முடியாதபடியும் நீதிபதி கார்மன் லமேலா உத்தரவிட்டார்.
இதற்கிடையே கோர்ட்டில் ஆஜராகாத கேட்டலோனியா தலைவர் புக்டிமான்ட் மற்றும் 4 மந்திரிகளை கைது செய்ய சர்வதேச கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் மீதான தண்டனை நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 30 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்கும். இதற்கிடையே ஸ்பெயின் அரசின் நடவடிக்கையை கண்டித்தும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரியும் கேட்டலோனியா பாராளுமன்றம் உள்ள பார்சிலோனியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.