துணைவேந்தர் மீது வன்கொடுமை வழக்குபதிவு - பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் விசாரணை

துணைவேந்தர் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்த போலீசார் பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
துணைவேந்தர் மீது வன்கொடுமை வழக்குபதிவு - பாரதியார் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் விசாரணை
Published on

வடவள்ளி:

கோவை நவாவூர் சுல்தான் புரத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவர் பாரதியார் பல்கலை கழகத்தில் டிரைவராக பணியாற்றினார்.

இவரது மனைவி லட்சுமி பிரபா பாரதியார் பல்கலை கழகத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் பணி அளிக்காததால் லட்சுமி பிரபா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் அவரது கணவர் கனகராஜ் வேலையில் இருந்து ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டார்.

இதற்கிடையே லட்சுமிபிரபா மற்றொரு துறையில் 5 ஆண்டுகள் உதவி தொகையுடன் கூடிய ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தை சரி பார்த்து பல்கலை கழக மானிய குழுவுக்கு அனுப்பாமல் வைத்திருந்தனர். இதுகுறித்து லட்சுமிபிரபா தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே துணைவேந்தர் கணபதி தன்னை சாதி பெயரை சொல்லி திட்டியதாக லட்சுமி பிரபா கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார்.

அதன்பேரில் துணைவேந்தர் கணபதி மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.

இதுகுறித்து துணைவேந்தர் கணபதியின் விளக்கத்தை அறிய அவரை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு குறித்து போலீசாரிடம் கேட்ட போது, லட்சுமி பிரபா அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. புகாருக்கு ஆதாரமாக அவர் அளித்த ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறோம். இதுதொடர்பாக பல்கலைகழக நிர்வாகத்தினரிடமும் விளக்கம் கேட்டு ஆய்வு செய்ய உள்ளோம். விசாரணைக்கு பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

வழக்குபதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கைது நடவடிக்கையை தவிர்க்க துணைவேந்தர் கணபதி சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com