

சென்னை:
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் இளங்கோவன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
அரசியலமைப்பு சட்டத்தில், துணை முதல்-அமைச்சர் என்ற பதவியே கிடையாது. அரசியலமைப்பு சட்டத்தின்படி, முதல்-அமைச்சரை மாநில கவர்னர் நியமிப்பார்.
அமைச்சர்களை, முதல்-அமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில் கவர்னர் நியமிப்பார். முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பதவிகளின் எண்ணிக்கை, மொத்த எம்.எல்.ஏ.க்களில், 15 சதவீதத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
இதன்படி பார்க்கும் போது, துணை முதல்-அமைச்சர் என்ற பதவியே அரசியலமைப்பு சட்டத்தின் படி கிடையாது. ஆனால், கடந்த 21-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், பதவி பிரமாணத்தின் போது, தன்னை துணை முதல்-அமைச்சர் என்று கூறியுள்ளார். கவர்னரும், அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இந்த பதவி பிரமாணம் சட்டப்படி இல்லாததால், ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சராக பதவி வகிக்க முடியாது. எனவே, எந்த சட்டத்தின் கீழ் துணை முதல்-அமைச்சராக பதவி வகிக்கிறார்? என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் இந்த கோர்ட்டு விளக்கம் கேட்டு, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழக்குகளில் பிறப்பித்த தீர்ப்புகளின்படி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.