

சூலூர்:
கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவ கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொட்டி வருகின்றனர். சில நேரங்களில் அவ்வாறு கொட்டி விட்டு செல்லும் கழிவுகளை எரித்து விட்டும் செல்கின்றனர். இதனால் அந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் சூலூர் அடுத்த காடாம்பாடி பகுதியில் உள்ள பொது இடத்தில் தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் யாரோ மருத்துவ கழிவுகளை கொட்டி விட்டு தீ வைத்து சென்றுள்ளனர் என நினைத்து அங்கு கூடினர்.
அப்போது அங்கு ஒருவர் சில பொருட்களை கொட்டி தீ வைத்து எரித்து கொண்டிருந்தார். அவரின் அருகில் ஒரு ஆட்டோ நின்றிருந்தது. பொதுமக்கள் ஆட்டோவின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அதில் லட்சக்கணக்கான அளவில் மருந்து, மாத்திரைகள் இருந்தன.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரிடம் விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த மக்கள் சம்பவம் குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களையும், ஆட்டோவில் இருந்த மருந்துகளையும் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் நெல்லையை சேர்ந்த இசக்கி என்பவரின் மகன் முத்து என்பதும், பாப்பநாயக்கன் பாளையத்தில் ஆட்டோ ஓட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த மருந்து மாத்திரைகள் அனைத்தும் அந்த பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வரும் சிந்தி என்பவர் தன்னிடம் ஏராளமான காலாவதியான மருந்து, மாத்திரைகள் இருப்பதாகவும், அதனை எங்காவது கொண்டு சென்று தீ வைத்து எரித்து விடுங்கள். உங்களுக்கு தேவையான பணத்தை தந்துவிடுவதாக கூறினார்.
அதன்பேரில் அவரிடம் இருந்த மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்து கொண்டு காடாம்படி பகுதியில் தீ வைத்து எரித்து கொண்டிருந்தேன். அப்போது தான் பொதுமக்கள் சந்தேகம் அடைந்து என்னை பிடித்து போலீசில் ஒப்படைத்ததால் மாட்டிக் கொண்டேன் என்றார்.
இதையடுத்து போலீசார் ஆட்டோவில் இருந்த லட்சக்கணக்கான காலாவதியான மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து முத்து, மருந்து விற்பனை பிரதிநிதி சிந்தி ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.