தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் உள்ள அரசு மருத்துவகல்லூரி முன்பு அரசு டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் நேற்றுஇரவு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தஞ்சையில் மெழுகுவர்த்தி ஏந்தி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சையில் உள்ள அரசு மருத்துவகல்லூரி முன்பு அரசு டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் நேற்றுஇரவு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு அரசு டாக்டர் கண்ணன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாட்டில், அரசின் கிராமபுற மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு எம்.டி. மற்றும் எம்.எஸ். போன்ற மேல்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் மருத்துவ மேல்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே தமிழகஅரசு சட்டசபையை விரைவில் கூட்டி மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அவசர சட்டத்தை நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலை பெற வலியுறுத்தியும், நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதால் வரும் ஆண்டில் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வற்புறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும் சிலர் செல்போன் லைட் மூலம் வெளிச்சத்தை ஏற்படுத்தினர்.

தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு மேற்கொள்வோம் என்று அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.

திருவாரூரில் டாக்டர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக திருவாரூர் அரசு மருத்துவமனை முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க மாவட்ட தலைவர் பைரவ நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் மூர்த்தி, மாநில செயலாளர் சவுந்தர ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com