தூத்துக்குடியில் கார்-லாரி மோதி விபத்து: 4 பேர் பலி

தூத்துக்குடியில் கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் அக்காள்-தம்பி உள்பட 4 பேர் பலியாகினர். இது தொடர்பாக டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாரி - கார் மோதி விபத்து
லாரி - கார் மோதி விபத்து
Published on

தூத்துக்குடி:

சென்னை அடையாறு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது73). இவரது மனைவி லட்சுமி. இவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் தரிசனத்திற்காக கடந்த 16-ந்தேதி ஒரு காரில் புறப்பட்டு சென்றனர்.

நேற்று மதுரையில் உள்ள கோவிலில் தரிசனம் செய்து விட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர். அவர்களுடன் மதுரையை சேர்ந்த அவர்களது உறவினர்கள் ஆனந்த் மகன் வீரேந்திரன் (15), அவரது சகோதரி ரம்யா (20), ரம்யாவின் தோழி பார்கவி ஆகியோர் மற்றொரு காரில் சென்றனர். இவர்களது காரை டிரைவர் ஜோசுவா (30) என்பவர் ஓட்டி சென்றார்.

ஜோசுவா ஓட்டி சென்ற கார் நேற்று நள்ளிரவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அருகே மேம்பாலத்தின் ஒருவழிப் பாதையில் வந்து கொண்டு இருந்தது. அந்த சமயத்தில் எதிரே தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி ஒரு லாரி வந்தது. அந்த லாரியை மதுரை பேரையூரை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் ஓட்டினார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு துறையினரும், சிப்காட் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

காரின் இடிபாடுகளில் சிக்கிய ரம்யா, பார்கவி, டிரைவர் ஜோசுவா ஆகியோர் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வீரேந்திரன் உடலை மீட்க முடியாததால் ஜே.சி.பி. எந்திரம் மூலம் காரின் பகுதிகளை உடைத்து அவரது உடலை மீட்டனர். இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பால கோபாலன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரகாஷ், பிரதாபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக கண்டெய்னர் டிரைவர் சந்திரசேகரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com