கார் டிரைவர் வெட்டிக்கொலை: கொலையாளிகளை கைது செய்ய கோரி மறியல்-கடையடைப்பு

சேரன்மகாதேவியில் கார் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட்டது.
கார் டிரைவர் வெட்டிக்கொலை: கொலையாளிகளை கைது செய்ய கோரி மறியல்-கடையடைப்பு
Published on

சேரன்மகாதேவி:

நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி கீழ 3-ம் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் தங்கபாண்டி (வயது22). கார் டிரைவரான இவர் நேற்றிரவு 9 மணியளவில் அங்குள்ள பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள் தங்க பாண்டியை வழி மறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்பியோடினார்.

எனினும் அந்த 4 வாலிபர்களும் தங்கபாண்டியை ஓட ஓட விரட்டி சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த தங்கபாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார், இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் தங்கபாண்டியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல் வெளியானது. சேரன்மகாதேவியை சேர்ந்த செல்லையா என்பவர் கடந்த 2016ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தங்கபாண்டிக்கு தொடர்பு இருந்துள்ளது. இதனால் செல்லையாவின் உறவினர்களான சேரன்மகா தேவியை சேர்ந்த ஆறுமுகம், சதீஷ், நம்பிராஜன், கொம்பையா ஆகியோர் 4 பேரும் சேர்ந்து தங்கபாண்டியை வெட்டிக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தலைமறைவான கொலையாளிகள் 4 பேரையும் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முனிஸ், நிசார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்றிரவு கொலை நடந்த சிறிது நேரத்தில் தென்காசியில் இருந்து சேரன்மகாதேவி வழியாக நாகர்கோவில் செல்லும் அரசு பஸ் மீதும் ஒரு கும்பல் கல் வீசி விட்டு தப்பி விட்டது. பஸ் மீது கல்வீசிய கும்பல் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேரன்மகா தேவியில் 2-வது நாளாக இன்றும் பதட்டம் நீடித்து வருகிறது. இதனால் சேரன்மகா தேவியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்ததால் பாபநாசம், களக்காடு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொலையாளிகளை கைது செய்தால்தான் தங்கபாண்டியின் உடலை வாங்குவோம் என அவரது உறவினர்கள் அறிவித்து பஸ் நிலையம் முன்பு இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக பஸ் நிலையத்திற்கு வரும் அனைத்து பஸ்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. அசம்பாவிதங்களை தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு சேரன்மகாதேவியில் ரோந்து சுற்றி வருகின்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com