ராஜபாளையத்தில் கார்-வேன் மோதல்: 5 பேர் பலி

ராஜபாளையத்தில் கார்-வேன் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் குறித்து தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்துக்குள்ளான கார்.
விபத்துக்குள்ளான கார்.
Published on

ராஜபாளையம்:

சிவகாசியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 31) உள்பட 5 பேர் காரில் குற்றாலம் சென்றனர். சுடலைமணி (30) என்பவர் காரை ஓட்டிச்சென்றார்.

குற்றாலத்தில் உற்சாகமாக குளித்துவிட்டு நேற்று நள்ளிரவுக்கு மேல் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர். ராஜபாளையம் கடம்பன்குளம் பாலத்தில் இன்று அதிகாலை 2 மணிக்கு கார்வந்தபோது எதிரே பயணிகள் வேன் வந்தது. எதிர்பாராதவிதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. அதில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். ராஜபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகசங்கர், தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காரை ஓட்டிய சுடலை மணி, முத்துக்குமார், ஐயப்பன் (33), அந்தோணிராஜ் (30) ஆகியோர் காரின் இருக்கையிலேயே உடல் நசுங்கி இறந்து விட்டனர்.

உயிருக்குப் போராடிய பிரபு நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

கார் மீது மோதிய வேன் மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து தென்காசிக்கு சென்றது விசாரணையில் தெரியவந்தது. அதில் வந்த 5 பேர் லேசான காயம் அடைந்தனர். விபத்து நடந்த இடம் பாலம் என்பதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com