

ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது45), அரசனட்டி சூர்யா நகரை சேர்ந்த ரஞ்சித் (44), ஓசூர் நியூ ஏ.எஸ்.டி.சி. அட்கோ பகுதியை சேர்ந்த சிவக்குமார் (41). இவர்கள் 3 பேரும் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை இவர்கள் 3 பேரும் காரில் தேன்கனிக்கோட்டைக்கு வந்தனர். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு வீடு திரும்பினர். அப்போது தேன்கனிக்கோட்டை-பஞ்சேஸ்வரம் என்ற இடத்தில் செல்லும்போது கார் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது எதிர் பாராதவிதமாக மோதியது. இதில் காரில் இருந்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். ரஞ்சித்துக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேல் சிகிச்சைக்காக சுப்பிரமணியை பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து ரஞ்சித் கொடுத்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.