திருச்சி அருகே கார் விபத்தில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் பலி

திருச்சி அருகே நள்ளிரவில் கார் கவிழ்ந்த விபத்தில் கணவன், மனைவி உள்பட 3 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Caraccident
விபத்தில் சிக்கிய கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
விபத்தில் சிக்கிய கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சி.
Published on

மணப்பாறை:

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த துறைமங்கலம் அருகே உள்ள மணியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 65). இவரது மனைவி சின்னம்மாள் (58). இவர்களது மகன் கண்ணன்.

மதுரையில் ஜவுளி தொழில் செய்து வரும் இவர் அங்கேயே மனைவியுடன் வசித்து வருகிறார். அவ்வப்போது மதுரைக்கு அவரது பெற்றோர் சென்று மகனை சந்தித்துவிட்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில் கண்ணன் தனது மைத்துனரான முசிறி அய்யம்பாளையம் குடித்தெருவை சேர்ந்த ஜெயராமனிடம், பெற்றோரை மதுரைக்கு காரில் அழைத்து வருமாறு கூறினார்.

அதன்படி நேற்று இரவு சுமார் 10 மணியளவில் ஜெயராமன், வெள்ளையன், சின்னம்மாள் ஆகிய 3 பேரும் ஒரு காரில் மணியம்பட்டியில் இருந்து மதுரைக்கு புறப்பட்டனர். காரை ஜெயராமன் ஓட்டினார்.

அவர்கள் திருச்சியை தாண்டி தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். துவரங்குறிச்சியை அடுத்த யாகபுரம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் அங்குள்ள பாலத்தின் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

பல முறை உருண்ட அந்த காருக்குள் இருந்த 3 பேரும் அலறினர். இதைபார்த்த அந்த வழியாக சென்று வாகன ஓட்டிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களை போராடி மீட்டனர்.

இந்த கோர விபத்தில் காருக்குள் இருந்த 3 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள். பின்னர் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகனை பார்க்க சென்ற போது விபத்தில் சிக்கி தம்பதி பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  #Caraccident

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com