

பேரையூர்:
திருமங்கலம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சிந்துபட்டி சப்- இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
சிந்துபட்டி சரகத்திற்குட்பட்ட அழகுசிறை கிராமத்தில் ரோந்து சென்றபோது ஒரு பெண்ணும் ஆணும் சாக்கு மூட்டையுடன் நடந்து வந்து கொண்டிருந்தனர். உடனே போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் 5¼ கிலோ கஞ்சா இருந்தது.
இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் முத்துக்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வீராசாமி (வயது 55), பிரபா (45) எனவும், 2 பேரும் கணவன்-மனைவி என தெரியவந்தது. கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? யார் கொடுத்தது? என விசாரணை நடந்து வருகிறது.