

ஒட்டாவா:
கனடா ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் கடந்த 11-தேதி கனடாவின் கல்கேரி நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ். பிரனாய், ஸ்காட்லாந்தின் கெய்ரன் மெர்ரிலெஸ்சை எதிர்கொண்டார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இப்போட்டியில் பிரனாய், 21-17, 16-21, 21-15 என்ற செட் கணக்கில் கெய்ரனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
அடுத்து நடைபெற உள்ள காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் பிரனாய், தென்கொரியாவின் ஜியோன் ஹெயோக்-ஜின்னை எதிர்கொள்ள உள்ளார்.
இதே சுற்றில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்திய வீரர் பருபள்ளி காஷ்யப், ஜப்பானின் வாட்னாபேவிடம் தோல்வியடைந்து வெளியேறினார். மற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் கே.ஆர். ராஜராஜன், அபிசேக் எலிகர் ஆகியோரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு அட்ரி- சுமித் ரெட்டி ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளது.