பீகார் சட்டசபை இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது - 78 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு

பீகார் சட்டசபை இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. 78 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாட்னா:

பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிவடைவதால், அங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. கடந்த மாதம் 28-ந் தேதி முதல்கட்ட தேர்தலும், கடந்த 3-ந் தேதி இரண்டாவது கட்ட தேர்தலும் முடிவடைந்தன.

இந்தநிலையில், நாளை (சனிக்கிழமை) மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் நடக்கும் 19 மாவட்டங்களில் அடங்கியுள்ள 78 சட்டசபை தொகுதிகளில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

இந்த மூன்றாம் கட்ட தேர்தலுக்கு உட்பட்ட தொகுதிகளில் மொத்தம் 12 பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசினார். உட்புற மாவட்டங்களான அரேரியா, சாகர்சா ஆகிய மாவட்டங்களிலும் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மாதேபுரா, அரேரியா ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் குறித்து சந்தேகம் தெரிவித்தார்.

முதல்-மந்திரி நிதிஷ்குமார், எதிர்க்கட்சி கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி ஆகியோர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பிரசாரம் செய்தனர்.

இறுதிக்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகள், வடக்கு பீகாரில் உள்ளன. சீமாஞ்சல் என அழைக்கப்படும் அப்பகுதியில் முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கிறார்கள்.

இத்தொகுதிகளில், 2 கோடியே 35 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள் ஆவர். 1,200-க் கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

சபாநாயகர் விஜயகுமார் சவுத்ரி, மாநில மந்திரிகள் சுரேஷ் சர்மா, பிரமோத் குமார், முன்னாள் மத்திய மந்திரி சரத்யாதவின் மகள் சுபாஷிணி யாதவ் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேட்பாளர்கள் ஆவர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com