சாரதா ஊழல்: கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு முன்ஜாமின் அளித்தது ஐகோர்ட்

ரூ.3000 கோடி மதிப்பிலான சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் தேடப்படும் கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் முன்ஜாமின் அளித்தது.
கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார்
கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார்
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை முறையாக நடத்தவில்லை எனக்கூறி கொல்கத்தா போலீஸ் கமிஷனராக முன்னர் இருந்த ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க சென்றது. 

அப்போது சி.பி.ஐ. அதிகாரிகளை அம்மாநில போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது நடவடிக்கைக்கு எதிராக ராஜீவ் குமார் முன்ஜாமீன் பெற்றார்.

இதற்கிடையே, சிபிஐ கைது செய்வதற்கான தடை கடந்த மாதம் 13-ம் தேதி விலக்கப்பட்டது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சென்றனர்.

அவர் அங்கு இல்லாததால் மேற்கு வங்காளம் மாநில தலைமை செயலகத்துக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது இருப்பிடம் தொடர்பாக கடந்த இருநாட்களாக விசாரித்தனர். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தும்படி மேற்கு வங்காளம் மாநில போலீஸ் டி.ஜி.பி. மற்றும் உயரதிகாரிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக கடந்த மாதம் 21-ம் தேதி காலை 10 மணிக்குள் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத கொல்கத்தா நகர முன்னாள் போலீஸ் கமிஷ்னர் ராஜீவ் குமாரை கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். 

இந்நிலையில், ராஜீவ் குமாருக்கு கல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று முன் ஜாமின் அளித்துள்ளது. ராஜீவ் குமார் கைது செய்யப்பட்டால் 50 ஆயிரம் ரொக்கப்பணத்தை பிணைத்தொகையாக பெற்று இரு நபர்களின் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட வேண்டும்.

மேலும், அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு 48 மணி நேரத்துக்கு முன்னதாக அனுப்பப்படும் நோட்டீஸ் எதுவானாலும் ராஜீவ் குமார் மதிப்பளித்து விசாரணையில் பங்கேற்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com