

புதுடெல்லி:
மத்திய கணக்காளர் மற்றும் தணிக்கை அமைப்பானது நாடாளுமன்றத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதற்கான செலவின கணக்கின் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், முதல் மற்றும் இரண்டாவது உலைகள் அமைக்க கூடுதல் காலம் எடுத்துக்கொண்டதால் 449 கோடி ரூபாய் கூடுதல் வட்டி செலுத்த நேரிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த இழப்பை ஈடுகட்டவோ, சரிகட்டவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதற்காக எச்.டி.எப்.சி வங்கியில் 1000 கோடி ரூபாய் கடன் வாங்கியதில் விதிமீறல் நடந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் உலை அமைக்க 7 ஆண்டுகளும், இரண்டாவது உலை அமைக்க 9 ஆண்டுகளும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், அணுமின் நிலையத்திற்கு வழங்கப்பட்ட குறைபாடுள்ள பொருட்கள் காரணமாக அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.