

தமிழக முதல்-அமைச்சராக கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். இதுவரை அவர் மூன்று தடவை தமிழக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பல்வேறு அரசியல் பரபரப்புகள் ஏற்பட்டன. குறிப்பாக அதிருப்தியுடன் இருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சரை சந்தித்து பேசி மனு கொடுத்தனர். அவர்கள் கொடுத்துள்ள நெருக்கடிக்கு இடையே மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவை கூட்டத்தை 4-வது முறையாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார். இன்று பிற்பகல் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்துத் துறை அமைச்சர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், முதல்வரின் செயலாளர்கள் மற்றும் அனைத்துத் துறை செயலாளர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டை அரசுடமையாக்கி அதை நினைவு இல்லம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மூலம் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பமும் அதுவாகவே உள்ளது.
எனவே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது பற்றி இன்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது. ஏற்கனவே இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிடம் இருந்து ரூ.100 கோடி அபராதம் வசூலிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அவர் மரணம் அடைந்து விட்டதால் அவரது சொத்துக்களை விற்று ரூ.100 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் போயஸ்கார்டனில் ஒரு பகுதியை இழக்க நேரிடும்.
அந்த இடம் விற்பனை செய்யப்படும் போது அதை தமிழக அரசே வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயலலிதா வசித்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் முழுமையாக அரசு கைக்கு வரும்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அந்த வீட்டுக்கு உரிமை கொண்டாடினாலும், அந்த வீட்டை அரசுடமை ஆக்க முடியும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க உள்ளார்.
இதற்கிடையே சென்னையில் ஜெயலலிதாவுக்கு மிக பிரமாண்டமான நினைவு சின்னம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா சமாதி அமைந்துள்ள மெரினா கடற்கரை பகுதியில் அந்த நினைவு சின்னம் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. இதற்கான உத்தரவையும் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவை தவிர தமிழக அமைச்சரவையை மாற்றுவது குறித்தும் இன்று பேசப்பட உள்ளது. தமிழக சட்டசபையில் ஜி.எஸ்.டி. மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றுவது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.
கடந்த சில தினங்களாக பள்ளிக் கல்வித் துறையில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் பற்றி தொடர்ந்து பல புதிய தகவல்கள் வெளி வந்தன. அந்த மாற்றங்களை எப்படி அமல்படுத்துவது என்பது பற்றியும் இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
மேலும் மானிய கோரிக்கை விவாதங்களுக்கான கொள்கை விளக்க குறிப்பு புத்தகங்கள் தயாரிப்பது, நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவது, ரியல் எஸ்டேட் சட்டம், மணல் ஆகியவை பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளை தூர்வாரி, அணைகளை பராமரிப்பது பற்றியும் இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. சேலம் உருக்காலை பிரச்சினை பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதுபற்றியும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படும்.
பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இன்றைய கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.