சென்னை, லக்னோ, கவுகாத்தி விமான நிலைய விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில், பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. சென்னை, லக்னோ மற்றும் கவுகாத்தி விமான நிலையங்களை ரூ.5 ஆயிரம் கோடியில் விரிவாக்கம் செய்து உள்கட்டமைப்பு, வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கரும்பு விவசாயிகளுக்கு பணம் பாக்கி வைத்துள்ள சர்க்கரை ஆலைகளுக்கு நிதி உதவி செய்வதற்கான திட்டம், வேளாண் துறையில் உள்ள 11 திட்டங்களை ஒருங்கிணைந்து ஒன்றாக மாற்றும் பசுமை புரட்சி - கிரிஷோனாதி யோஜனா திட்டம், வணிக பிரச்சனைகளை விரைந்து தீர்க்க வழிசெய்யும் சட்டதிருத்த மசோதா ஆகிவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சமூக பாதுகாப்பு திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அடிப்படை தொகை 7.5 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சமாக உயர்த்துவதற்கும் கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. #CabinetCommittee

