சிஏஏ போராட்டம்- கைது நடவடிக்கையை நிறுத்த ஐகோர்ட் உத்தரவு

சிஏஏ தொடர்பான போராட்டங்கள் மற்றும் பேரணியில் ஈடுபடுவோரை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் நிறுத்தி வைத்தனர்.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பேரணி நடத்தி வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நீடிக்கின்றன. பல்வேறு பகுதிகளில் காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமலேயே போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இதற்கிடையே திருப்பூரில் நடைபெற்றும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், அனுமதியின்றி போராடுபவர்களை கைது செய்யும்படி டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

போராட்டக்காரர்களை கைது செய்யும் இந்த உத்தரவு தமிழகம் முழுவதற்கும் பொதுவான உத்தரவாகவே பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்கறிஞர்கள் இன்று உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். கைது உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர். திருப்பூர் போராட்டம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த நபர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், அமைதியாக போராடி வரும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்றும் வழக்கறிஞர்கள் கேட்டுகொண்டனர்.

இதையடுத்து, போராட்டக்காரர்களை கைது செய்வது தொடர்பாக பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக அனைத்து தரப்பு வாதங்களும் 11-ம் தேதி கேட்கப்படும் என்றும் தெரிவித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com