போலீஸ் கமிஷனர் கையெழுத்தை போலியாக தயாரித்து மோசடி- தொழில் அதிபர் உள்பட 5 பேர் கைது

பெட்ரோல் பங்க் உரிமத்தை புதுப்பித்து கொள்வதற்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கையெழுத்தை போலியாக போட்டு மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது
கைது
Published on

சென்னை:

சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்குகளை தொடங்கவும், உரிமத்தை புதுப்பிக்கவும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக உள்ளது. இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து கமிஷனரிடமும், நிர்வாக பிரிவு துணை கமிஷனரிடமும் உரிய அனுமதியை பெற வேண்டும். இவர்கள் இருவரும் கையெழுத்து போட்ட பிறகுதான் பெட்ரோல் பங்கை தொடங்கவும், உரிமத்தை புதுப்பித்து கொள்ளவும் முடியும்.

இந்த நிலையில் பெட்ரோல் பங்க் அனுமதியை பெறுவதற்கான தடையில்லா சான்றுக்கு சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதனின் கையெழுத்தை போலியாக தயாரித்து போட்டுள்ளார். இந்த துணிகர மோசடி போலீஸ் உயர் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தனது தந்தையின் பெயரில் 16 இடங்களில் பெட்ரோல் பங்குகளை நடத்தி வருகிறார். ஆண்டு தோறும் பெட்ரோல் பங்குக்கான தடையில்லா சான்றிதழை இவர் பெறுவது வழக்கம். இந்த நிலையில் பெட்ரோல் பங்க் உரிமத்துக்கான தடையில்லா சான்றிதழை பெறுவதில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிலர் உடந்தையாகவும் இருந்துள்ளனர்.

இதுபற்றிய புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திருவொற்றியூரைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் அதிபர் சிவக்குமார், முகேஷ்வரன், ஜெயபிரகாஷ், கணேஷ்பாபு, சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமார் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீது மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல், அரசு அதிகாரியின் பெயரை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 8 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்ட பிரிவுகளான 420, 465, 466, 467, 468, 472 மற்றும் 47, 36 ஆகிய 8 சட்டப்பிரிவு களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

5 பேரும் சேர்ந்து பெட்ரோல் பங்க் அனுமதிக்கு 6 பேரிடம் பணம் வாங்கி இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து முறைப்படி வாங்க வேண்டிய தடையில்லா சான்றிதழை முறைகேடாக கம்ப்யூட்டரில் தயாரித்து மோசடி செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சிவகுமார் உள்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com