திருவெறும்பூர் அருகே தொழிலதிபரை கொன்ற கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவெறும்பூர் அருகே முன்பகை தகராறில் தொழிலதிபரை கொன்ற கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொலை
கொலை
Published on

திருவெறும்பூர்:

திருச்சி மாவட்டம் திரு வெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் அண்ணாநகர் வி.எஸ்.காலனியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகன் ராஜசேகர் (வயது 38) இவர் காட்டூர் பகுதியில் வெளிநாடு வேலைக்கு ஆட்கள் அனுப்பும் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்தார். மேலும் தனது வீட்டிலேயே சிறிய அளவில் மளிகை கடை வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த கோபால் என்ற வாலிபர் தலைமையில் 7 பேர் கொண்ட கும்பல் ராஜசேகரின் கடையை சூறையாடியதுடன், வீடு புகுந்து ராஜசேகரை சரமாரியாக வெட்டிக்கொன்றனர். இச்சம் பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 முதல்கட்ட விசாரணையில் அதேப்பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அந்த பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது ராஜசேகர் இது குடிநீர் , குளிப்பதற்கு இல்லை என்று கூறி கோபாலை சத்தம் போட்டதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே முன்பகை இருந்து வந்த நிலையில் நேற்று கோபால், தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் அரிவாள், கத்தியுடன் வந்து ராஜசேகரை வெட்டிக்கொன்று விட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தப்பியோடிய கோபால் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராஜசேகருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ராஜவர்ஷினி (5) என்ற மகளும் பிரபாகரன் (1) என்ற மகனும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com