

சென்னை:
சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் சுரேஷ் ஜீவரத்தினம். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் மகாலட்சுமி.
சென்னை பெருங்குடியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 55) என்ற தொழில் அதிபர் சுரேஷ் ஜீவரத்தினத்துக்கு பழக்கம் ஆனார்.
இருதய நோய் பற்றி கண்டறியும் இ.சி.ஜி. கருவியை நவீன தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை தொடங்கப்போவதாக முத்துகிருஷ்ணன், சுரேஷ் ஜீவரத்தினத்திடம் தெரிவித்தார். புதியதாக தொடங்கப்போகும் தொழிற்சாலைக்கு ரூ.5½ கோடி சுரேஷ் ஜீவரத்தினம் முதலீடு செய்ததாக தெரிகிறது.
ஆனால் தொழிற்சாலை ஏதும் தொடங்காமல் ரூ.5½ கோடி பணத்தையும், முத்துகிருஷ்ணன் மோசடி செய்துவிட்டதாக சுரேஷ் ஜீவரத்தினம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது மனைவி மகாலட்சுமி வாயிலாக புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் மல்லிகா, உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டியன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். தொழில் அதிபர் முத்துகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். #tamilnews