பணிமனை இடிந்து 8 ஊழியர்கள் பலி - பொறையாறில் இன்று 2-வது நாளாக பஸ்கள் ஓடவில்லை

அனைத்து பணி மனைகளிலும் ஓய்வறை, கழிப்பறை மற்றும் கட்டிடங்களை முறையாக பராமரிக்க வலியுறுத்தியும் இன்று 2-வது நாளாக பொறையாறு பணி மனையில் பஸ்கள் இயக்கப்படவில்லை.
பணிமனை இடிந்து 8 ஊழியர்கள் பலி  - பொறையாறில் இன்று 2-வது நாளாக பஸ்கள் ஓடவில்லை
Published on

தஞ்சாவூர்:

நாகை மாவட்டம் பொறையாறில் நேற்று அரசு போக்குவரத்து பணிமனை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 7 டிரைவர்கள், ஒரு கண்டக்டர் பலியானார்கள். காயம் அடைந்த 3 பேர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மிகவும் பழமையான கட்டிடத்தால் 8 பேர் பலியானதாக தொழிற்சங்கத்தினர், ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.

பலியான 8 ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று பஸ் ஊழியர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். பொறையாறில் நேற்று பஸ்கள் இயக்கப்படவில்லை.

பொறையாறு பணிமனை இடிந்து விழுந்ததில் பலியான 8 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும், அனைத்து பணி மனைகளிலும் ஓய்வறை, கழிப்பறை, மற்றும் கட்டிடங்களை முறையாக பராமரிக்க வலியுறுத்தியும் இன்று 2-வது நாளாக பொறையாறு பணி மனையில் பஸ்கள் இயக்கப்படவில்லை.

இந்த பணிமனையில் உள்ள 30 பஸ்களும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

நாகை மாவட்டத்தில் நாகை, மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய பணிமனையில் இன்று அதிகாலை பஸ் ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர். அதிகாலை 4 மணி வரை முதல் 6 மணி வரை பஸ்கள் இயக்கப்படவில்லை. தஞ்சை பணிமனையிலும் பஸ் ஊழியர்கள் இன்று அதிகாலை 2 மணி நேரம் வரை பஸ்கள் இயக்கப்படவில்லை.

போக்குவரத்து கழக ஊழியர்கள் 8 பேர் பலியான சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இன்று அதிகாலை தஞ்சை புறநகரில் உள்ள கரந்தை போக்குவரத்து பணிமனை மற்றும் ஜெபமாலை புரத்தில் உள்ள நகர் கிளை முன்பு அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புறநகர் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பொறையாறில் 8 பேர் பலியான சம்பவத்துக்கு காரணமான தொழிற்சாலை ஆய்வாளரை கண்டித்தும், முறையாக பராமரிப்பு செய்யாத கழக நிர்வாகத்தை கண்டித்தும், விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com