குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு பஸ்கள் ஓடவில்லை

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நேற்று முதல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்து உள்ளனர். இதனால் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு பஸ்கள் ஓடவில்லை
Published on

களியக்காவிளை:

குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவுக்கு 37 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல 37 கேரள அரசு பஸ்களும் குமரி மாவட்டத்திற்கு வந்துசெல்கின்றன. குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கும் தினமும் ஏராளமான பயணிகள் பயணம் செய்வதால் இந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஆனால் போராட்டம் காரணமாக குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்கள் எதுவும் நேற்று மாலை முதல் செல்லவில்லை. மேலும் இன்று காலையும் பஸ்கள் கேரளாவிற்கு இயங்கவில்லை. இதே போல கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் மாவட்ட எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டது.

இதனால் பயணிகள் தவிப்புக்கு ஆளானார்கள். ஆட்டோ போன்ற வாகனங்கள் மூலம் அவர்கள் குமரி மாவட்டத்திற்கு வந்ததை காணமுடிந்தது.

குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் தினசரி பஸ் மூலம் கேரளாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவது வழக்கம். பஸ்கள் எதுவும் கேரளாவுக்கு இன்று செல்லாததால் அவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

இதனால் ரெயில்மூலம் அவர்கள் கேரளாவிற்கு சென்றனர். இதேபோல் பல்வேறு பணிகளுக்காக கேரளா செல்லும் பொது மக்களும் ரெயில்நிலையத்திற்கு படை எடுத்தனர். நாகர்கோவிலில் இருந்து காலை 6.45 மணி, 7.45 மணிக்கு கேரளாவுக்கு சென்ற பாசஞ்சர் ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com