பஸ் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்குமா? - இன்று மாலை முடிவாகிறது

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று பிற்பகல் 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பஸ் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்குமா? - இன்று மாலை முடிவாகிறது
Published on

சென்னை:

அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கடந்த சில மாதங்களாக போராடி வருகிறார்கள்.

ஏற்கனவே போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் 1.9.2016-வுடன் முடிவடைந்தது. புதிய ஊதிய ஒப்பந்தம் உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தையும் நடந்துள்ளது.

பஸ் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு படிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதை வலியுறுத்தி கடந்த வாரம் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்தவுடன் இதுபற்றி பேசி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தொழிற் சங்க பிரதிநிதிகள் ஊதிய ஒப்பந்த குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

அதில் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அலவன்ஸ், ஊதிய உயர்வு விகிதம் பற்றி விவாதிக்கப்பட்டது.

இறுதி பேச்சுவார்த்தை போக்குவரத்து அமைச்சர் முன்னிலையில் இன்று முடிவு செய்யப்படுவதாக கூறப்பட்டது. அதன்படி தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று பிற்பகல் 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

குரோம்பேட்டையில் நடக்கும் இந்த பேச்சு வார்த்தையில் தொ.மு.ச. தலைவர் சண்முகம், பொருளாளர் நடராஜன், சி.ஐ.டி.யூ. சார்பில் சவுந்தர் ராஜன், ஆறுமுகநயினார், ஏ.ஐ.டி.யூ.சி. ஜெயலட்சுமணன், ஐ.என்.டி. யூ.சி. சார்பில் டாக்டர் விஷ்ணு பிரசாத், பாட்டாளி சங்கத்தை சேர்ந்த முத்துக்குமார், விடுதலை சிறுத்தை அர்ஜுனன் உள்பட 47 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டத்தில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு வழங்குவது என்பது குறித்து இறுதி செய்யப்படுகிறது.

மேலும் ஊதிய உயர்வு ஒப்பந்த காலத்தை 4 அல்லது 5 ஆண்டாக நீட்டிப்பு செய்யவும், அரசு சார்பில் வலியுறுத்தப்படுகிறது. தற்போது பெறும் குறைந்தபட்ச ஊதியத்தை விட ரூ.2000 மேலாக வழங்க வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக உள்ளது.

தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு என்பது குறித்து இன்று மாலைக்குள் முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யவும் தொழிற்சங்கங்கள் தயாராக இருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com