பஸ் ஸ்டிரைக்: பணிக்கு வராத தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது போக்குவரத்து துறை
சென்னை:
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து தொ.மு.ச. உள்ளிட்ட 14 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
போராட்டம் நடத்தும் தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் பரிந்துரை செய்தது.
எனினும் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் மூன்றாவது நாளாக இன்றும் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் தற்காலிக ஊழியர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பணிக்கு வராத தொழிலாளர்களுக்கு போக்குவரத்துத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி பணிக்கு வராத தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டிருக்கிறது. நாளைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் போக்குவரத்து துறை கூறியுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் நாளைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews #BusStrike #TransportDepartment

