

சென்னை:
தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் நாள் ஒன்றிற்கு ரூ.20 கோடி வருவாய் கிடைக்கிறது.
ஆனால் வருவாயை விட போக்குவரத்து கழகத்திற்கு செலவு அதிகம் ஏற்பட்டு வருகிறது. டீசல், சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவுகள் என்று தினமும் ரூ.8½ கோடி நஷ்டத்தி இயங்கி வருகிறது. தற்போது நீடித்து வரும் வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சுமார் ரூ.40 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
3-வது நாளாக நீடித்து வரும் பஸ் ஸ்டிரைக் காரணமாக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.45 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 35 சதவீத பஸ்கள் இயக்கப்படுவதால் தினமும் ரூ.5 கோடி அளவிற்கு வருவாய் கிடைக்கிறது.
ஆனால் தற்போதைய நிலவரப்படி நாள் ஒன்றுக்கு வருவாயை விட ரூ.8.5 கோடி நஷ்டம் ஏற்படுவதால் சமாளிக்க முடியவில்லை. ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டு இருப்பதால் இந்த நஷ்டம் மேலும் உயரும் என்றார்.
சென்னையில் இருந்து நீண்ட தூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்கள் 90 சதவீதம் இயக்கப்பட்டன. மொத்தம் 882 விரைவு பஸ்கள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டன. சபரி மலைக்கு 25 சிறப்பு பஸ்கள் நேற்று புறப்பட்டு சென்றன.
மற்ற போக்குவரத்து கழகங்களைவிட விரைவு போக்குவரத்து கழகத்துடன் தொழிலாளர்களுக்கு இணக்கமான உறவு இருப்பதால் அதிக பஸ்களை இயக்க முடிகிறது என்று அதிகாரி தெரிவித்தார். #tamilnews