

சென்னை:
பஸ் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஒரு வாரமாக நீடித்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக பிரச்சினைக்கு முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொழிற்சங்கங்கள் பிடிவாதமாக இருப்பதால் போராட்டம் நீடித்து வருகிறது. இதனால் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படாத நிலை உருவாகியுள்ளது.
பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லக் கூடியவர்கள் பஸ் இல்லாமல் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது. பஸ் ஸ்டிரைக்கை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எப்போதும் பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாகிவிட்டது.
இப்போது அரசு பஸ்கள் ஒரு வாரமாக முடங்கி கிடப்பதால் தனியார் பஸ்களிலும், ஆம்னி பஸ்களிலும் இஷ்டத்திற்கு கட்டணம் வசூலிக்கிறார்கள்.
சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் ஆம்னி பஸ்களில் கட்டணம் உச்சத்தை தொட்டுள்ளது. சிறப்பு பஸ்கள் மட்டுமின்றி வழக்கமாக இயக்கப்படும் அரசு பஸ்களும் முழு அளவில் ஓடாததால் ஆம்னி பஸ்களில் இடங்கள் நிரம்பி விட்டன. மக்களின் தேவையை அறிந்து ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தி உள்ளனர்.
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ‘செமி சிலிப்பர் ஆம்னி பஸ் ஒன்றில் அதிகபட்சமாக ரூ.2,625 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வழக்கமான நாட்களில் ரூ.800 முதல் ரூ.1000 வரை வசூலிப்பது உண்டு. தற்போது பண்டிகை காலம் என்பதாலும், அரசு பஸ்கள் ஓடாததாலும் கட்டண கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல பிற ஆம்னி பஸ்களில் ரூ.2500, ரூ.2000, ரூ.1400 என பல்வேறு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன் லைன் மூலமாக ஆம்னி பஸ்களுக்கு முன்பதிவு செய்யக் கூடிய வசதி இருப்பதால் அவரவர் இஷ்டத்துக்கு கட்டணத்தை நிர்ணயித்து மக்களிடம் வசூலிக்கிறார்கள்.
அரசு பஸ்கள், சிறப்பு பஸ்கள் ஓடாத நிலையை பயன்படுத்தி மக்களிடம் அதிக கட்டண வசூலில் மனிதாபமின்றி ஒரு சில ஆம்னி பஸ், சுற்றுலா பஸ் ஆபரேட்டர்கள் ஈடுபடுகிறார்கள். மக்களும் சொந்த ஊருக்கு போய் சேர்ந்தால் போதும் என்ற மனநிலையில் பயணம் செய்கிறார்கள்.
பஸ் ஸ்டிரைக் நீடித்து வருவதால் பொதுமக்கள் நலன் கருதி கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வேயிடம் அரசு வலியுறுத்தி வருகிறது.
ஏற்கனவே விடப்பட்ட சுவிதா சிறப்பு ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. ஒரு ரெயில் சேவையை அதிகரிப்பது 2 ஆயிரம் பயணிகளுக்கு பயன் உள்ளதாக அமையும். அதனால் பொங்கல் கொண்டாடுவதற்கு நாளை பயணம் செய்ய வசதியாக சாதாரண சிறப்பு ரெயில்களை கூடுதலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பிலும் கோரிக்கை வலுத்து வருகிறது. #TamilNews #BusStrike