பஸ் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட மாநகர போக்குவரத்து ஊழியர்கள் 18 ஆயிரம் பேருக்கு நோட்டீசு

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மட்டும் 18 ஆயிரம் ஊழியர்களுக்கு நோட்டீசு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
பஸ் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட மாநகர போக்குவரத்து ஊழியர்கள் 18 ஆயிரம் பேருக்கு நோட்டீசு
Published on

சென்னை:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

8 நாட்கள் நீடித்த இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் அரசு பஸ் சேவை முடங்கியது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதன்பிறகு 11-ந்தேதி முதல் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கி வருகிறது.

வேலைநிறுத்த போராட்டத்தின் தொடக்க நாளான 4-ந்தேதி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

இதுபற்றி பொதுமக்கள் ஏராளமானோர் புகார் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு நடத்தி வேலைக்கு வராத ஊழியர்கள் பற்றி கணக்கெடுத்தனர்.

இதன் தொடர்ச்சியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சுமார் 1 லட்சம் ஊழியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மட்டும் 18 ஆயிரம் ஊழியர்களுக்கு நோட்டீசு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

ஒரே நாளில் 18 ஆயிரம் பேருக்கு அனுப்ப முடியாது என்பதால் தினமும் 2 ஆயிரம் பேருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com