

சென்னை:
பஸ் ஸ்டிரைக் நீடித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
தொழிற்சங்கங்கள் பிடிவாதமாக இருப்பதால் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் உறுதியாக இருந்து வருகின்றனர்.
இதற்கிடையே பொங்கல் சிறப்பு பஸ்கள் நாளை (11-ந்தேதி) முதல் 13-ந்தேதி வரை இயக்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. 11,900 சிறப்பு பஸ்கள் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பஸ் ஸ்டிரைக் காரணமாக சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு நடை பெறவில்லை. இதனால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் அறிவித்தபடி சிறப்பு பஸ்களை இயக்க அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. அரசு பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்படுவதால் வெளியூர் செல்லும் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தனியார் பஸ்களை சிறப்பு பஸ்களாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தனியார் பஸ் ஆபரேட்டர்கள், ஆம்னி பஸ் உரிமையாளர்கள், சுற்றுலா பஸ் இயக்க கூடியவர்கள் மூலம் எத்தனை பஸ்கள் உள்ளன என கணக்கிடப்பட்டுள்ளது. இது தவிர தனியார் நிறுவனங்கள், கல்லூரிகளுக்கு சொந்தமான பஸ்களையும் சிறப்பு பஸ்களாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தனியார் பஸ்கள் முழு அளவில் வெளியூர்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்லூரி பேரூந்துகளும், நாளை முதல் வெளியூர் பயணத்திற்கு சிறப்பு பஸ்களாக ஈடுபடுத்தப்பட உள்ளன. கல்லூரிகளுக்கு பொங்கல் விடுமுறை விடப்படுவதால் அவர்களுக்கு பஸ் பயன்பாடு தற்போது தேவையில்லை. அதனால் அனைத்து தனியார் கல்லூரிகளில் பயன்படுத்தி வரும் பஸ்களையும் அவர்களின் டிரைவர்களையும் பயன்படுத்தி சென்னையில் இருந்து பஸ்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 49 ஆயிரம் பயணிகள் 3 நாட்கள் பயணம் செய்ய முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.
அவர்களின் பயணம் தடைபடாமல் பாதுகாப்பாக கொண்டு செல்ல 50 சதவீத அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படும். மீதமுள்ள பயணிகளை தனியார் பஸ்கள் மூலம் அரசு விரைவு பஸ்கள் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கோயம்பேட்டில் இருந்து மதுரை, திருச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கும், பூந்தமல்லியில் இருந்து வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளன.
அண்ணாநகர் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி மார்க்கத்திற்கு செல்லும் பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. தாம்பரம் சானிடோரியத்தில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளுக்கும், சைதாப்பேட்டையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, சிதம்பரம், கடலூர் பகுதிக்கும் பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன.
இது குறித்து போக்கு வரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் சொந்த ஊர் செல்ல சிறப்பு பஸ்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது.
வழக்கமாக செல்லக் கூடிய விரைவு பஸ்களில் 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தாக வேண்டும். நாளை 370 பஸ்களிலும், 12-ந்தேதி 750 பஸ்களிலும், 13-ந்தேதி 730 பஸ்களிலும் பயணம் செய்ய தயாராக இருக்கிறார்கள். விரைவு பஸ்கள் 50 சதவீதம் இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் தனியார் கம்பெனி, கல்லூரிகளுக்கு சொந்தமான பஸ்களை நீண்ட தூரத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
முன்பதிவு செய்த பயணிகள் அந்தந்த பஸ் நிலையங்களுக்கு முன்கூட்டியே சென்றுவிட வேண்டும். மேலும் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கும் தனியார் பஸ்கள் சிறப்பு பஸ்களாக மாற்றி விடப்படுகிறது என்றார். #TNTransportstrike #Busstrike #tamilnews