ராணிப்பேட்டையில் டிரான்ஸ்பார்மர் மீது பஸ் மோதல்- 40 பயணிகள் உயிர் தப்பினர்

ராணிப்பேட்டையில் டிரான்ஸ்பார்மர் மீது பஸ் மோதல்- 40 பயணிகள் உயிர் தப்பினர்

ராணிப்பேட்டையில் 40 பயணிகளுடன் சென்ற ஆந்திர அரசு பஸ் டிரான்ஸ்பார்மரில் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
Published on

வாலாஜா:

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள உறவுகொண்டா (உருவிகொண்டா) பகுதியில் இருந்து சென்னைக்கு இன்று காலை அம்மாநில அரசு பஸ் 40 பயணிகளுடன்சென்று கொண்டிருந்தது.

சித்தூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காரை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேரி கார்டு வளைவில் பஸ் திரும்பியது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் பயங்கரமாக மோதியது. இதில் டிரான்ஸ்பார்மர் உடைந்து நொறுங்கியது. மின்வயர்கள் பஸ் கூரை மீது கொத்தாக விழுந்தது.பஸ்சுக்குள் இருந்த 40 பயணிகளும் ‘அபயக்குரல்’ எழுப்பினர். பஸ்சை விட்டு உடனடியாக கீழே இறங்கி விட்டனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவலறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின் இணைப்பை துண்டித்தனர். விபத்தில் சிக்கிய பஸ்சில் இருந்த அனைத்து பயணிகளும் மாற்று பஸ்களில் தங்களது ஊர்களுக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com