

சென்னை:
பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், திரும்ப பெற கோரியும் கடந்த 22-ந்தேதி கல்லூரி மாணவ- மாணவிகள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று 3-வது நாளாக மாணவர்களின் போராட்டம் நீடித்தது.
தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் இன்று வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி எதிரே உள்ள பெரியார் சிலை முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் காலை 9 மணி அளவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒரத்தநாட்டில் இன்று காலை கல்லூரி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து வரிசையாக நின்றன.
கல்லூரி மாணவிகளின் போராட்டத்தை பஸ்சில் பயணம் செய்த மற்ற கல்லூரி மாணவிகள் கேள்விப்பட்டனர். அவர்களும் பஸ்சை விட்டு இறங்கி கல்லூரி மாணவிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி முன்பு திரண்டு அரசு பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கல்லூரி வாசலில் இருந்து ஊர்வலமாக செல்ல மாணவர்கள் திரண்டு வந்தனர்.
அப்போது கும்பகோணம் போலீஸ் டி.எஸ்.பி. கணேசமூர்த்தி மற்றும் போலீசார் மாணவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் மாணவர்களுக்கும் போலீசாருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கேட்டை விட்டு மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியேற முடியாதப் படி போலீசார் தடுத்து கொண்டே இருந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் போராட்டத்தை கைவிடாமல் வெளியே வர முயற்சித்தனர். அப்போது போலீசார் திடீரென தடியடி நடத்தினர். இதனால் மாணவர்களும், மாணவிகளும் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதன்பின்னர் கல்லூரி வளாகத்தில் சென்ற மாணவ- மாணவிகள் அங்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 7.30 மணியளவில் செட்டிக்குளம் கடைவீதியில் திரண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஆண், பெண்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் அரசு -தனியார் பஸ்களை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். சம்பவ இடத்திற்கு பாடாலூர் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொது மக்கள் மறியலை கைவிட மறுத்து விட்டனர். இதன் காரணமாக காலையில் வேலைக்கு செல்லக் கூடியவர்கள், வெளியூர் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
போராட்டம் காரணமாக பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை அப்பகுதி பொது மக்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் சுமார் 500-க் கும் மேற்பட்டோர் திரண்டு பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு திரண்ட மாணவர்கள், பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
இதேபோல் அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் இன்றும் நாளையும் விடுமுறை அளித்து கல்லூரி முதல்வர் ( பொறுப்பு) சிற்றரசு உத்தர விட்டார்.
திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பரங்குன்றம், மூலக்கரையில் கல்லூரி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மாணவர்கள் மீது சரமாரியாக தடியடி நடத்தினர்.
இன்று பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவ, மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மதுரை திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள மதுரை கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடி அருகே பள்ளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.