மயிலாடுதுறையில் பஸ் வராததால் மாணவர்கள் திடீர் சாலை மறியல்

மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் மணல்மேடுக்கு செல்லக்குடிய பஸ் வராததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையில் பஸ் வராததால் மாணவர்கள் திடீர் சாலை மறியல்
Published on

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பழைய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் மாலை 5 மணி அளவில் காளி வழியாக மணல்மேட்டுக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் மணல்மேடு பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் வீட்டிற்கு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று மாலை 5 மணிக்கு பள்ளி, கல்லூரிகள் முடிந்தவுடன் வீட்டுக்கு செல்வதற்காக மாணவ- மாணவிகள் மயிலாடுதுறை பஸ் நிலையத்திற்கு வந்தனர். ஆனால் இரவு 7 மணி வரை காத்திருந்தும் மணல்மேடுக்கு செல்ல அரசு பஸ் வராததால் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ- மாணவிகள் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை வசதி சரியாக இல்லாததால் பஸ் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறியும், மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. உடனே போலீசார், அங்கிருந்து மாணவ-மாணவிகளை அப்புறப்படுத்தி வேன் மூலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அதனை தொடர்ந்து அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளரிடம் தகவல் தெரிவித்து சிறப்பு பஸ் இரவு 7.30 மணிக்கு போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் 8.30 மணி அளவில் மாணவ-மாணவிகள் சிறப்பு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

நீண்ட நேரமாகியும் மாணவ-மாணவிகள் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் பரிதவித்தனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com