

திருநின்றவூர்:
ஆவடி, காமராஜர் நகர், ராமலிங்கம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது 38). ஆவடி ரெயில் நிலையம் அருகே பூ வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த 2-ந் தேதி வெளியில் சென்ற சுந்தரம் திரும்பி வரவில்லை. கள்ளக்காதல் விவகாரத்தில் அவரை கொன்று ஆவடி கவுரி பேட்டையில் உள்ள ஆட்டோ டிரைவர் திவான் என்பவரது வீட்டில் உடலை புதைத்து இருப்பது தெரிந்தது.
இது குறித்து ஆவடி போலீசார் வழக்குபதிவு செய்து சுந்தரத்தின் கள்ளக் காதலிகள் கவுரி பேட்டையை சேர்ந்த ராஜேஸ்வரி, அவரது தம்பியின் மனைவி அமுதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று மதியம் சுந்தரத்தின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஆட்டோ டிரைவர் திவான், அவரது நண்பர் கோபி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
அவர்கள் தனித்தனியாக செய்யாறு மற்றும் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.
கைதான ராஜேஸ்வரி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-
நானும், சுந்தரமும் ஆவடி ரெயில் நிலையம் அருகே பூ வியாபாரம் செய்து வந்தோம். அப்போது எங்களுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதற்கிடையே எனது தம்பி சரவணன் இறந்து விட்டதால் அவரது மனைவி அமுதா அடிக்கடி எனது கடைக்கு வந்தார். அப்போது அமுதாவுடன் சுந்தரம் நெருங்கி பழகினார்.
நாளடைவில் அமுதாவுடன் உள்ள நெருக்கத்தால் என்னுடன் உள்ள தொடர்பை சுந்தரம் துண்டித்து விட்டார். இதற்கிடையே அமுதாவுக்கும், திவானுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த சுந்தரம் எங்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
எனவே அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தோம்.இது தொடர்பாக திவானிடம் கூறினோம். கடந்த 2-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி சுந்தரத்தை திவானின் வீட்டுக்கு அழைத்து சென்றோம். அங்கு அவரை விட்டு விட்டு நானும், அமுதாவும் வந்து விட்டோம்.
திவானும், அவரது நண்பர் கோபியும் சேர்ந்து சுந்தரத்தை வெட்டி கொலை செய்து உடலை வீட்டிலேயே புதைத்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.