

தக்கலை:
தக்கலையை அடுத்த சாமிவிளையை சேர்ந்தவர் ஞானதாஸ். கட்டிட தொழிலாளி இவரது மகன் ஜஸ்டின் (வயது 33). கட்டிட தொழிலாளி. இன்னும் திருமணம் ஆகவில்லை. பெற்றோருடன் வசித்து வந்த ஜஸ்டின், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார்.
பின்னர் பாலபள்ளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இன்று அதிகாலை ஜஸ்டின் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் பிணமாக கிடந்தார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஜஸ்டின் குடும்பத்தாருக்கு தெரிவித்தனர். அவர்கள் உடனே அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போத ஜஸ்டின் உடலில் சில இடங்களில் காயங்கள் காணப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த ஜஸ்டினின் உறவினர்கள் அவர் இறந்து கிடந்தது பற்றி தக்கலை போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜஸ்டினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜஸ்டின் எப்படி இறந்தார்? சாவில் மர்மம் உள்ளதா? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.