வெள்ளிச்சந்தை அருகே கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை

வெள்ளிச்சந்தை அருகே செல்போன் மாயமான தகராறில் கட்டிட தொழிலாளியை அடித்துக்கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கொலை
கொலை
Published on

ராஜாக்கமங்கலம்:

வெள்ளிச்சந்தை அருகே கீழ சூரப்பள்ளத்தை சேர்ந்தவர் கலைக்குமார் (வயது 51) கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மாலை வேலைக்கு சென்று விட்டு பேயோடு பகுதியில் உள்ள சிந்துகுமார் (30) என்பவரது டீக்கடையில் டீ குடித்தார். அப்போது கடையில் இருந்த சிந்துகுமாரின் செல்போனை காணவில்லை.

இதுதொடர்பாக சிந்து குமார், கலைக்குமாரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிந்துகுமார், கட்டிட தொழிலாளி கலைக்குமாரை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து பலத்த காயத்துடன் கலைக்குமார் வீட்டிற்கு சென்றார். மனைவியிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்தார். பின்னர் சாப்பிட்டுவிட்டு தூங்கினார். இன்று காலை கலைக்குமார் வீட்டில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சாந்தாகுமாரி வெள்ளிச்சந்தை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த கலைக் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சாந்தாகுமாரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சிந்துகுமாரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சிந்து குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com