

திருப்பூர்:
தூத்துக்குடியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது57). கட்டிட தொழிலாளி. இவர் குடும்பத்துடன் திருப்பூர் செட்டிபாளையம் பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து ஆரோக்கியசாமி வீடு திரும்பினார். வீட்டில் இருந்து சிறிது நேரத்தில் மீண்டும் வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்று காலை பெருமாநல்லூர் ரோடு பகுதியில் ரோட்டோரம் ஒருவர் கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடப்பதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது கட்டிட தொழிலாளி ஆரோக்கியசாமி என்பது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து ஆரோக்கியசாமியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ஆரோக்கியசாமியின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டிட தொழிலாளர்களுக்கு சனிக்கிழமை தோறும் சம்பள நாள் ஆகும். எனவே சம்பள பணம் பிரிக்கும் தகராறில் இந்த கொலை நடந்ததா? அல்லது முன் விரோத தகராறு காரணமாக கொலை செய்யப்ட்டாரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை குறித்து துப்பு துலக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் ஆரோக்கியசாமி பிணமாக கிடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்து கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்துகிறார்கள்.
ஆரோக்கியசாமியை வேறு எங்காவது கொலை செய்து உடலை இங்கு கொண்டு வந்து வீசி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே அதன் அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது.