கட்டிட மேஸ்திரியை அடித்து கொன்ற வாலிபர்கள் 2 பேர் கைது

மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் கட்டிட மேஸ்திரியை அடித்து கொன்ற வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

நெமிலி:

காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் பகுதியை சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் சுரேஷ் (வயது36). கட்டிட மேஸ்திரி. நேற்று காலை காவேரிப்பாக்கம் அருகே உள்ள பொய்கைநல்லூர் மக்ளின் கால்வாயில் சுரேஷ் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதனைக் கண்ட விவசாயி ஒருவர் இது குறித்து அவளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

சுரேஷ் உடலில் காயங்கள் இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

சுரேஷ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தாமல் பகுதியை சேர்ந்த மதிவாணன் (30), ஹரிஹரன் (31) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சுரேஷ் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

சுரேஷ் மதிவாணன், ஹரிஹரன் 3 பேரும் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு மக்ளின் கால்வாயில் அமர்ந்து 3 பேரும் மது குடித்துள்ளனர்.

அப்போது சுரேஷூக்கும் மதிவாணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மதிவாணன், ஹரிஹரன் இருவரும் சேர்ந்து சுரேஷை சராமரியாக தாக்கினர்.

படுகாயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் இருவரும் ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட்டதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com