திருச்சி அருகே கட்டிட தொழிலாளி படுகொலை- மர்ம நபர்கள் வெறிச்செயல்

திருச்சி அருகே கட்டிட தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே கட்டிட தொழிலாளி படுகொலை- மர்ம நபர்கள் வெறிச்செயல்
Published on

புலிவலம்:

திருச்சி மாவட்டம் புலிவலம் திண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வனரோஜா ( 28). இவர்களுக்கு பிரதிக்ஷா (8) என்ற மகளும், கிஷோர் (6) என்ற மகனும் உள்ளனர். 

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். வனரோஜா, குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். ராஜசேகர் திண்ணனூரில் தனியாக வசித்து வந்தார். 

இந்த நிலையில் இன்று காலை திண்ணனூர் கரட்டாம் பட்டி கூச்சிக்காடு காட்டுப்பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக புலிவலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். 

அப்போது அங்கு இறந்து கிடந்தது ராஜசேகர் என்பது தெரியவந்தது. அவரது கழுத்து நெரிக்கப்பட்ட நிலையிலும், தலையில் கல்லால் தாக்கப்பட்ட காயமும் இருந்தது. இதனால் அவரை மர்ம நபர்கள் காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார், எதற்காக கொலை செய்தனர்? என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சம்பவ இடத்திற்கு ஜம்பு நாதபுரம் டி.எஸ்.பி. ராதா கிருஷ்ணனும் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். ராஜசேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கட்டிட தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com