10 கோடி குடும்பங்களுக்கு இலவச மருத்துவ வசதி: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

பாராளுமன்றத்தில் இன்று மத்திய மந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்த 2018-19ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களை விரிவாக பார்க்கலாம். #Budget2018 #UnionBudget2018
10 கோடி குடும்பங்களுக்கு இலவச மருத்துவ வசதி: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
Published on

புதுடெல்லி:

பாராளுமன்றத்தில் இன்று 2018-19ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய மந்திரி அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

நாங்கள் 4 ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பேற்ற போது நாடு ஊழலில் மூழ்கி கிடந்தது. நாங்கள் அதை மாற்றி நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்தி மேம்படுத்தி வருகிறோம். தற்போது இந்திய பொருளாதாரம் வலிமை பெற்று வருகிறது.

ஜி.எஸ்.டி. மூலம் வரி செலுத்துவது எளிமைபடுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியா 2½ லட்சம் பொருளாதார மதிப்புடன் உலக அளவில் 5-வது இடத்தில் உள்ளது. நாங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7.5 சதவீதம் என்ற அளவில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக வைத்துள்ளோம்.

எங்களது நிர்வாகம் வெளிப்படையான நிர்வாகமாகும். நாட்டில் கருப்புப் பணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில் இந்தியா வேகமாக வளரும் நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு வரும் அன்னிய முதலீடு கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

2018-19ம் நிதியாண்டின் இரண்டாம் பகுதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் முதல் 7.5 சதவீதம் இருக்கும். தற்போது நாட்டின் தானிய உற்பத்தி அதிகரித்து வருகிறது. பாஸ்போர்ட் போன்ற பதிவுகள் ஒரே நாளில் முடியும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

விவசாயிகள் நலனை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது. விவசாயிகள் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே நலிந்தோருக்கு நன்மை செய்யும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்.

விவசாய விளைப்பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பண மதிப்பு இழப்பு செய்யப்பட்டதால் ரொக்கப் பணத்தை கையாள்வது குறைந்துள்ளது. டிஜிட்டல் பண பரிமாற்றம் மேம்பட்டுள்ளது. ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 17 சதவீதம் உயர்ந்துள்ளது.

விவசாயிகளுக்கு உற்பத்தி செலவில் இருந்து 1.5 மடங்கு லாபம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளைபொருட்கள் உயர்வை மேம்படுத்த உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்.

விவசாய சந்தைகள் அமைக்க ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்க மேலும் சில புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும்.

கிராமங்களில் சாலைகள் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கடன் அட்டை திட்டம் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

விவசாய உள்கட்டமைப்புகளுக்கு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். விவசாய கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.

ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மீன் வளம் மற்றும் கால்நடை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். ரூ.1209 கோடி மூங்கில் வளர்ப்புக்கு ஒதுக்கப்படும்.

ஏழைகளுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. 8 கோடி பெண்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும். 4 கோடி பேரின் வீடுகளுக்கு புதிதாக மின் இணைப்பு வழங்கப்படும். இந்தியாவின் நேரடி மானியத் திட்டம் உலக அளவில் புகழ் பெற்றுள்ளது.

காற்று மாசுவை தடுக்க டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களுக்கு உரிய உதவி கள் வழங்கப்படும்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும். வரும் நாட்களில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2 கோடி கழிவறைகள் கட்டப்படும்.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 2018-19ம் ஆண்டு 51 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். கிராமப்புற வேலை வாய்ப்புக்காக ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இயற்கை வேளாணுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.

உணவு பதப்படுத்துதல் 8 சதவீதம் மேம்பட்டுள்ளது. வரும் ஆண்டில் இந்த துறைக்கு ரூ.1400 கோடி வழங்கப்படும். வேளாண் தொடர்பான “ஆப்ரேசன் கிரீன்” திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.

சூரிய மின்சக்தி மூலம் கூடுதல் மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் ரெயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும். பழங்குடி இன மக்களின் குழந்தைகள் மேம்பாட்டுக்காக ‘ஏகலவ்யா’ எனும் புதிய கல்வி திட்டம் தொடங்கப்படும்.

ஏழை-எளிய மக்களுக்கு மின் வசதி வழங்க ரூ.16000 கோடி வழங்கப்படும்.

நாடு முழுவதும் 96 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த ரூ.2600 கோடி வழங்கப்படும். பி.டெக் மாணவர்கள் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு உயர்கல்வி வசதி கொடுக்கப்படும்.

நாடு முழுவதும் 1.5 லட்சம் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும். 24 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும். காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.600 உதவித்தொகை வழங்கப்படும்.

இலவச மருத்துவ திட்டத்துக்கு ரூ.1200 கோடி வழங்கப்படும். 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ செலவுக்கு ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். அரசு உதவியுடன் செய்யப்படும் மிகப்பெரிய மருத்துவ திட்டமாக இது உலக அளவில் இருக்கும்.

இந்த திட்டம் காரணமாக சுமார் 50 கோடி பேர் மருத்துவ பயன்களை பெறுவார்கள்.

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1 கோடி புதிய வீடுகள் கட்டப்படும். முத்ரா கடன் திட்டத்தில் 76 சதவீதம் பெண்கள் பலன் அடைந்துள்ளனர். கிராமப்புற சுகாதார வசதிக்கு ரூ.16,000 கோடி வழங்கப்படும்.

பள்ளிகளில் இனி கரும்பலகைகளுக்கு பதில் டிஜிட்டல் பலகை திட்டம் அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் மேலும் 18 ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.ஐ.டி. தொடங்கப்படும்.

நாடு முழுவதும் 70 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. 115 மாவட்டங்களை மேம்படுத்த தனி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்கள் மேம்பாட்டுக்காக 219-க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும். பழங்குடி இன மக்கள் மேம்பாட்டுக்கு 305-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும்.

ஜவுளித் துறை மேம்பாட்டுக்கு ரூ.7140 கோடி ஒதுக்கப்படும். பெண்கள், கணவனை இழந்த பெண்களுக்கு உதவ புதிய திட்டம் கொண்டு வரப்படும்.

வருங்கால வைப்பு நிதியில் பெண்கள் பணிக்கு சேர்ந்த 3 ஆண்டுகளில் 8 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தை அடுத்த ஆண்டு கொண்டாட ரூ.150 கோடி ஒதுக்கப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.  #Budget2018 #UnionBudget2018  #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com