

உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியாக பாரதிய ஜனதா உள்ளது. அதே நேரத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை அந்த மாநிலத்தில் பிரதான கட்சிகளாக உள்ளன.
இந்த இரு கட்சிகளுக்கும் பொது எதிரியாக பாரதிய ஜனதா உள்ளது. இதற்கு முன்பு சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் ஒருவரை ஒருவர் எதிர்த்து தீவிரமாக செயல்பட்டு வந்தனர். ஆனால், இப்போது தங்கள் பொது எதிரியான பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் இரு கட்சிகளும் கை கோர்த்துள்ளன.
சமீபத்தில் அந்த மாநிலத்தில் கோராக்பூர், புல்பூர் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. இதன் காரணமாக 2 தொகுதிகளிலுமே சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றது.
அதில் கோராக்பூர் தொகுதி யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதி ஆகும். அங்கு 5 முறை தொடர்ந்து பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருந்த நிலையில் இப்போது சமாஜ்வாடி கட்சி அதை கைப்பற்றியது.
அடுத்து பாராளுமன்ற தேர்தலிலும் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் பாரதிய ஜனதா பல தொகுதிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கருதப்படுகிறது. இதனால் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றன. அதற்கான பேச்சுவார்த்தைகளும் ரகசியமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம்சிங் யாதவ் பங்கேற்ற பொதுக் கூட்டம் மைன்புரி நகரில் நடந்தது. இந்த கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினரும் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் கொடிகளாக காட்சி அளித்தன.
கூட்டத்தில் பேசிய முலாயம்சிங் யாதவ், நாம் சரியான வேட்பாளரை தேர்வு செய்து நிறுத்தினால் நமது கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது என்று மிகுந்த உறசாகத்துடன் கூறினார்.
25 ஆண்டுகளுக்கு முன்பு சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து இருந்தன. 1993-ல் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் ஆட்சி அமைத்த போது, அந்த கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்தது. இடையில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக 1995-ல் சமாஜ்வாடி கட்சிக்கு அளித்த ஆதரவை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வாபஸ் பெற்றார். இதனால் முலாயம்சிங் அரசு மெஜாரிட்டி இழந்தது.
அப்போது சமாஜ்வாடி கட்சியினர் வன்முறையில் இறங்கினார்கள். அந்த நேரத்தில் மாயாவதி லக்னோவில் உள்ள அரசு மாளிகையில் தங்கி இருந்தார். அங்கு நுழைந்து சமாஜ்வாடி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பகுஜன் சமாஜ் தலைவர்கள் பலரும் தாக்கப்பட்டனர்.
பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று தங்கள் ஆட்சிக்கு ஆதரவாக கையெழுத்து போட வைத்தனர். இந்த பிரச்சினைக்கு பிறகு இரு கட்சிகளும் நிரந்தர பகையாளிகளாக மாறின. அவர்களுக்குள் எந்த உறவும் இல்லாமல் இருந்தது.
இப்போது பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்துடன் இருவரும் ஒன்றிணைந்து இருக்கிறார்கள்.