

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பூஞ்ச் மற்றும் கத்துவா மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய கண்கானிப்பு நிலைகளின் மீதும் அருகாமையில் உள்ள கிராமங்கள் மீதும் நேற்று பின்னிரவில் இருந்து இன்று காலை வரை பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய கண்காணிப்பு நிலைகளை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
கத்துவா மாவட்டத்தில் உள்ள மன்யாரி எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று பின்னிரவு துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் குண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த அபிஷேக் ராய் என்பவர் படுகாயமடைந்தார்.