சிறுமி ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டான்

தாயை கொன்ற வழக்கில் மீண்டும் மும்பையில் கைது செய்யப்பட்ட சிறுமி ஹாசினி கொலை குற்றவாளி தஷ்வந்த் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கொண்டு வரப்பட்டான்.
Published on

திருவள்ளூர் மாவட்டம் மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கத்தில் வசித்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாபுவின் மகள் சிறுமி ஹாசினி(6)யை, பிப்ரவரி 6-ம் தேதி அதே குடியிருப்பில் வசித்துவந்த தஷ்வந்த் (24) கற்பழித்து கொலை செய்தான்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த மாங்காடு போலீசார் தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடந்த செப்டம்பரில் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ஐகோர்ட்டு ரத்துசெய்து ஜாமீனில் விடுவித்தது. இதையடுத்து, அங்கிருந்து வீட்டை காலி செய்து குன்றத்தூருக்கு தனது பெற்றோருடன் சென்றான் தஷ்வந்த்.

கடந்த வாரம் குடிக்க பணம் கேட்டு தரமறுத்த தாய் சரளாவை கொன்று விட்டு 25 சவரன் நகைகளை திருடிக் கொண்டு தப்பிச்சென்றான். தகவலறிந்த குன்றத்தூர் போலீசார் அங்கு வந்து சரளா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தலைமறைவான தஷ்வந்தை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர். இதையடுத்து, மும்பை பாந்த்ரா பகுதியில் மறைந்திருந்த தஷ்வந்தை தமிழக போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.

ஹாசினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் நேற்று முன்தினம் மும்பையில் போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்ற நிலையில், நேற்று தஷ்வந்தை தமிழக போலீசார் மீண்டும் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட தஷ்வந்தை தமிழக போலீசார் இன்று மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவனுக்கு 3 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், போலீஸ் காவல் முடிந்ததும் டிசம்பர் 12-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் ஆணை பிறப்பித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com